அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு: இரு மாணவர்கள் உட்பட நால்வர் பலி
ஜோர்ஜியா உயர்நிலை பாடசாலையில் நேற்று புதன்கிழமையன்று 14 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
இரு மாணவர்களும், இரு ஆசிரியர்களுமே சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர். மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டினை நடத்திய கோல்ட் கிரே என்ற மாணவன், சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோர்ஜியா புலனாய்வுப் பணியகம் கூறியுள்ளது.
அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் 29 படுகொலைகள் நடந்துள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை நடந்த 45 பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு மிக மோசமானது என சிஎன்என் (CNN) செய்திச் சேவை மதிப்பிட்டுள்ளது.
அதேநேரம், இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 385 பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை அமெரிக்கா சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.