ஐக்கிய மக்கள் சக்தி , யாழ்ப்பாணத்திற்குள் நுழையக்கூட போராடுகிறது- ரணில்
இலங்கை ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய சகாப்தத்தை உருவாக்க, அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73வது ஆண்டு பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது. ஏனைய நாடுகளில், இலங்கை தங்கியிருப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும். இலங்கையர்கள் தாமாகவே தேசத்தைக் கொண்டு நடத்தும் வகையிலான நிதியை உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன் விளைவாக புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி வாக்குகளை திருடுவதில் ஈடுபட்டுள்ளது என்று கூறிய அவர், தேசிய மக்கள் சக்தி அதன் வரலாற்றுடன் தொடர்பை இழந்துவிட்டதாகவும், அவர்களின் கடந்த காலத்தை ஒப்புக்கொள்ளாமல் முன்னேறுவது அவர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை நாட்டுக்கு என்ன பங்களித்தன? தமிழ் கட்சிகளின் வாக்குகளை திருட முயன்று பிடிபட்ட ஐக்கிய மக்கள் சக்தி இப்போது யாழ்ப்பாணத்திற்குள் நுழையக்கூட போராடுகிறது. அரசியல் கட்சிகள் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.