ஆந்திரா-கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்: 20 ரயில்கள் ரத்து

ஆந்திரா-கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்: 20 ரயில்கள் ரத்து

ஹைதராபாத்: கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே பல்வேறுஇடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ரயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது ரயில்வே துறை. சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விஜயவாடா மூத்த கோட்ட வணிக மேலாளர் ராம்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, சார்மினார், கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனபாடு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் பயணித்த பயணிகள் விஜயவாடா ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். கேசமுத்திரம், டோர்னக்கல், கம்மம் போன்ற இடங்களில் வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மழை காரணமாக சில ரயில்கள் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டுள்ளன.

அதிகாலை 1 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. பயணிகளுக்காக பேருந்து வசதியை ஏற்படுத்திய ரயில்வே துறைக்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

CATEGORIES
Share This