’’பாலியல் துன்புறுத்தல்” காங்.தலைவி கட்சியிலிருந்து நீக்கம்

’’பாலியல் துன்புறுத்தல்” காங்.தலைவி கட்சியிலிருந்து நீக்கம்

“சினிமாவில் மட்டும் தான் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா, காங்கிரஸ் கட்சியிலும் தான் இருக்கிறது” என்று புகார் கூறிய காங்கிரஸ் கட்சியின் கேரள பெண் தலைவர், சில மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ‘ஹேமா கமிட்டி’ அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, கேரள நடிகைகள் தங்களது வாழ்க்கையில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றனர்.

அந்தவகையில், கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சிமி ரோஸ்பெல் ஜோன், ‘திரையுலகில் உள்ள ‘கொஸ்டிங் கவுச்’ முறையைப் போன்று காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிறது. கட்சிக்குள் வாய்ப்புகளை பெறுவதற்காக பெண் உறுப்பினர்கள் பாலியல் சுரண்டலை சகித்து கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆண் தலைவர்களை கவர்வதன் மூலம் மட்டுமே குறிப்பிடத்தக்க பதவியை பெற முடியும். திறமைக்கும், அனுபவத்துக்கும் மரியாதையே கிடையாது” என்று அவர் குற்றச்சாட்டினார்.

இந்நிலையில், அவர் புகார் எழுப்பிய சில மணி நேரத்திலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகங்கள் முன்பாக பெண் தலைவர்களை அவமதித்ததற்காக சிமி ரோஸ்பெல்லை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். ரோஸ்பெல்லின் குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் கட்சியில் உள்ள இலட்சக்கணக்கான பெண் தலைவர்களை மனரீதியாக துன்புறுத்துவதையும், அவதூறு செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.S

CATEGORIES
Share This