திருமலை திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் “கோகுலம் மையம்” இந்து கற்றல் நிலையம்
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் “கோகுலம் மையம்” இந்து கற்றல் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருகோணமலையில் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை (31) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கோனேஸ்வரம் என்ற பழமையான ஆலயம், தெற்கு கைலாசமாக இந்துக்களின் புனிதப் பராமரிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த ஆலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தாம் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள சிவில் பாதுகாப்புப் படையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்தை எந்த அரசாங்கமும் அபிவிருத்தி செய்யவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
திருகோணமலையை அபிவிருத்தி செய்ய ஆர். சம்பந்தன் தொடர்ந்து தன்னிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அப்போது அவருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாகத் தெரிவித்தார்.