‘புலிப்புராணம்’ பாடும் நாமல்: மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சியா?

‘புலிப்புராணம்’ பாடும் நாமல்: மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சியா?

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன.

இதில் குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்தியும், புலிப்புராணம் பாடியும் வாக்கு வேட்டை நடத்துவதற்குரிய பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டி நடைபெறும் பிரதான கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றுவருகின்றார்.

எனினும்,அவர் உரையாற்றுவதில்லை. போரை முடித்த தலைவர் இங்கிருக்கின்றார் எனக் கூறி பிரசாரம் செய்யப்படுவதுடன், புலிகளை தோற்கடித்த தலைவர் எனக் கூறி புலிகள் பற்றியே அதிகமாக இவர்களின் மேடைகளில் பேசப்படுகிறது.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டீ. வீரசிங்க, திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோர் புலிகள் பற்றியும், புலம்பெயர் தமிழர்கள் குறித்தும் அதிகம் உரையாற்றிவருகின்றனர்.

கேர்ணல் கடாபியை கொலை செய்ததுபோல் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள், மகிந்தவை கொலை செய்வதற்கு மே 9 ஆம் திகதி நிதி உதவி செய்தனர் என இத்தேகந்த தேரர் குற்றஞ்சாட்டிவருகின்றார்.

புலிகளால் மரண பீதியில் வாழ்ந்த மக்களுக்கு மகிந்தவே சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தார் என டீ. வீரசிங்க எம்.பி. குறிப்பிடுவதுடன், எல்லை கிராமங்களில் அன்று நிலவிய அச்சநிலை பற்றியும் சுட்டிக்காட்டி வருகின்றார்.

மறுபுறத்தில் முப்படை கட்டமைப்பை கொண்டிருந்த – அழிக்க முடியாத அமைப்பாக கருதப்பட்ட புலிகளையே அழித்த தலைவர்தான் மகிந்த என மார்தட்டி வருகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

நாமல் ராஜபக்சவும் புலிகளுக்கு எதிரான போர் முடிக்கப்பட்டது, ஒற்றையாட்சி பலப்படுத்தப்படும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் பகிரப்படமாட்டாது என்றெல்லாம் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார்.

2009 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் போர் வெற்றியை மையப்படுத்தியதாகவே ராஜபக்ச தரப்பின் பிரசாரம் வியூகம் அமைந்துள்ளது. சிங்கள, பௌத்த வாக்கு வங்கியை குறிவைத்தே இந்த வியூகம் என பரவலாக விமர்சனங்கள் கடந்த காலங்களில் எழுந்தன.

ஆனால், இவர்களது மேடை பேச்சுகள் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத் கருத்துகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பும் வகையில் அமைவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய போக்கு தொடர்ந்தால் அது நாட்டில் மீண்டும் இன முறுகல்களுக்கு வழிவகுக்கும் நிலைகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

CATEGORIES
Share This