இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்கள்
ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள மூன்று வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் அண்மையில் காலமானதாகவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், உயிரிழந்த வேட்பாளருக்கு உத்தியோகபூர்வ மாற்றீடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
“உயிரிழந்த வேட்பாளருக்கு உத்தியோகபூர்வ மாற்றீட்டை நியமிக்காததில் ஒரு பலவீனத்தை நான் காண்கிறேன்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீதமுள்ள 38 வேட்பாளர்களில், 15 பேர் மட்டுமே குறைந்தபட்சம் கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மீதமுள்ள 23 பேரில், குறைந்தது 10 பேர் கொண்ட எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவில்லை.
15 வேட்பாளர்கள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு கூட்டத்தையாவது ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 23 வேட்பாளர்களில் ஐந்து பேருக்கு பேஸ்புக் கணக்கு கூட இல்லை.
குறைந்தபட்சம் மூன்று வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு பற்றி பகிரங்க அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.
அவர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டு, கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும், அவர்கள் தங்களை வேட்பாளர்களாக எங்கும் அறிமுகப்படுத்தவில்லை.
மேலும், மேற்படி வேட்பாளர்களின் அடிப்படைத் தகவல்களையாவது பெறுவதற்கு உரிய அதிகாரிகளின் முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாக அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த வேட்பாளர்களில் பலரின் புகைப்படங்களை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.