நாமலை கண்டிக்க வேண்டும்: ரணில் முன்னிலையில் பசிலிடம் சொல்லப்பட்ட செய்தி

நாமலை கண்டிக்க வேண்டும்: ரணில் முன்னிலையில் பசிலிடம் சொல்லப்பட்ட செய்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் தேர்தல்கள் குறித்து ஆராயும் முகமாக இருவரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நிமல் சிறிபாலடி சில்வா, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் குழுவொன்றும் ஏனைய சில குழுக்களும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைக்க சு.க தயாரில்லை என ஜனாதிபதி மற்றும் பசில் முன்னிலையில் சு.கவினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று நாமல் ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என வஜிர அபேவர்தன, பசிலிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சு.கவுக்கும் வஜித அபேவர்தனவுக்கும் அதிருப்தியை வெளிப்படுத்திய பசில் ராஜபக்ச, அனைவரும் இணைந்தே ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டுமென்ற தொனியில் பதிலளித்துள்ளார்.

அத்துடன், நாமல் ராஜபக்ச ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கட்சியுடன் கலந்துரையாடி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் நிலைக்கு பொதுஜன பெரமுன தள்ளப்படலாம் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் தேர்தல் கூட்டணிகள் குறித்து பேசப்பட்ட போதிலும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அறிய முடிந்தது.

CATEGORIES
Share This