ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போன்று ஓடி ஒழிந்தார் சஜித்: நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீட்டவன் நானே

ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போன்று ஓடி ஒழிந்தார் சஜித்: நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீட்டவன் நானே

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்லும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அனுராதபுரத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இது எமது ஆரம்ப பயணம் மாத்திரமே. நாம் இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.இது பிளவடைந்து செல்வதற்கான நேரமல்ல.

இது மும்மமதத்தினரும் இணைந்துள்ள இடமாகும். அதனாலேயே கட்சிவேறுபாடின்றி இன்று அனைவரும் எம்முடன் இணைந்துள்ளனர். அதனாலேயே நான் கட்சி வேறுபாடின்றி சுயாதீன வேட்பாளராக தேர்தலில் முன்னிலையாகியுள்ளேன்.

நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்திலேயே நான் இந்த நாட்டை பொறுப்பேற்றேன். நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகினார். எதிர்க்கட்சி தலைவர் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போன்று ஓடி ஒழிந்தார்.

அனைவரும் நாட்டை பொறுப்பேற்கும் முயற்சியில் பின்வாங்கி சென்றார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் இந்த நாட்டை பொறுப்பேற்றேன்.இந்த நாட்டுமக்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்க்கமான தருணம் வந்துள்ளது.

எரிவாயு எரிபொருள் வரிசையுகத்தை நிறைவுக்கு கொண்டுவந்தேன். மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் இன்னும் பல. மின்சாரமின்றி மக்கள் அவதியுற்றனர். இன்று இந்த நாட்டில் ஜனாதிபதியாகும் கனவில் உள்ள சஜித் பிரேமதாச அநுரகுமார திசாநாயக்க போன்றோர் அப்போது எங்கு சென்றார்கள்?

மக்களின் துன்பம் அறிந்தவர்களாக இருந்தால் அவர்கள் அன்று இந்த நாட்டை பொறுப்பேற்றிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் போது மக்கள் மீது வரிசுமத்தப்பட்ட போது அவர்கள் எதிர்கொண்ட துன்பத்தை நான் அறிவேன்.

இன்று மக்கள் எதிர்கொண்ட சுமைகள் படிப்படியாக குறைவடைந்துவருகின்றன. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. காணி உரிமைகள் வழங்கப்படுகின்றன. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அரிசிமானியம் வழங்கப்படுகின்றது.

நாட்டை மீட்டெடுக்கும் திட்டத்தின் போது சர்வதேச நாணயநிதியத்தின் ஒத்துழைப்பு போன்று உலகின் 18 நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. இந்த அனைத்து தரப்பினரும் எமக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வேலைத்திட்டத்திற்கமைய செயற்படுவதாயின் கடன்செலுத்துவதில் நிவாரணம் வழங்குவதாக கூறுகின்றனர். நாடு இன்று வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

கடன்மறுசீரமைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்தினை மறுசீரமைக்கப்பொவதாக அநுரவும் சஜித்தும் கூறுகின்றனர்.

அவர்களின் இந்த கூற்று நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும்.அதாவது சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்லும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This