“கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி – இலங்கை மீண்டும் எதிர்ப்பு!

“கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி – இலங்கை மீண்டும் எதிர்ப்பு!

கனடாவின் பிரம்டன் நகரில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி என்ற நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனடாவில் வாக்குவங்கி அரசியலுக்காகத் தொடர்ந்து பரப்பப்படும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிரம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான இந்த செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டானது, தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட புனையப்பட்ட மற்றும் சர்வதேச அளவில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாகப் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும், நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
Share This