தமிழரசுக் கட்சியுடன் ரகசியமாக பேசும் இந்தியா: வடக்கு, கிழக்கை குறிவைக்கிறது சீனா

தமிழரசுக் கட்சியுடன் ரகசியமாக பேசும் இந்தியா: வடக்கு, கிழக்கை குறிவைக்கிறது சீனா

தமிழரசுக் கட்சியுடன் ரகசியமாக பேசும் இந்தியா: வடக்கு, கிழக்கை குறிவைக்கிறது சீனா

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்ய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனுத் தாக்கல்கள் நேற்று வியாழக்கிழமை நிறைவடைந்த கையோடு பிரதான வேட்பாளர்கள் தமது பிரசாரக் கூட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேததாச இன்றைய தினம் தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை குருணாகலையில் நடத்துகிறார். அதேபோன்று நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இடம்பெற உள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் மூன்று பிரசாரக் கூட்டங்கள் தெற்கை மையப்படுத்தி இடம்பெற உள்ளன.

நாட்டின் அனைத்துக் கட்சிகளும் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்ட சூழலில் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம் இன்னமும் எவ்வித முடிவுகளை எடுக்காதுள்ளது.

தமிழரசுக் கட்சிக்குள் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எட்ட முடியாதுள்ளமையால் கலந்துரையாடல்களில் எவ்வித இணக்கப்பாடுகளும் ஏற்படுவதில்லை.

என்றாலும், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், மூத்த உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடன் பிரதான வேட்பாளர்களாக உள்ள ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் ரகசிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, அடிக்கடி சுமந்திரனையும் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து தமிழ் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கம் கோரிவருவதாக தெரியவருகிறது.

அத்துடன், பிரதான வேட்பாளர்களிடம் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ளுமாறும் இத்தருணத்தில் செய்துக்கொள்ள வேண்டிய விடயங்களை செய்துக்கொள்ளுமாறும் அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

என்றாலும், யாரை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் குழப்பான நிலையில் இந்தியா இருப்பதால் தமிழரசுக் கட்சிக்கு நிபந்தனைகள் எதனையும் இதுவரை இந்தியா முன்வைக்கவில்லை என்றும் அறிய முடிகிறது.

அடுத்தவாரம் மீண்டும் தமிழரசுக் கட்சி மீண்டும் கூடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேச்சுகளை நடத்த உள்ளது.

இந்த நிலையில், வடக்கு,கிழக்கில் தமது ஆதிக்கத்தை செலுத்த சீனாவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

வட, கிழக்கின் அரசியல்வாதிகள் இந்தியாவின் பேச்சை தட்டமுடியாது செயல்படுவதால் இங்குள்ள மக்களின் ஆதரவை பெற்றால் எதிர்காலத்தில் தமக்கான ஆதரவு தளமொன்றை இங்கு கட்டியெழுப்ப முடியும் என சீனா எதிர்பார்க்கிறது.

இதன் காரணமாகவே வட, கிழக்கை மையப்படுத்தி பல்வேறு உதவித்திட்டங்களை சீனா தொடர்ந்து செய்துவருகிறது.

சீன அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சுமார் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில், அதனை கடற்றொழிலாளர்களுக்கு கையளிக்கும் பல்வேறு நிகழ்வுகள் அடுத்துவரும் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக வடக்கில் நான்கு மாவட்டங்களும் கிழக்கில் மூன்று மாவட்டங்களுக்கு சீன தூதுவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இவரது இந்த பயணத்தின் பின்புலத்தில் பல்வேறு இராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவும் இது எதிர்காலத்தில் இங்கு இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் முயற்சிகளின் ஒரு திட்டமாக இருப்பதாக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா மௌனம் காத்து வருகிறது. ஆனால், சீனா வடக்கு, கிழக்கு மக்களின் மனதை கவரும் நிகழ்ச்சி நிரலுடன் பயணப்பதாகவும் இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This