வாத்தை சாப்பிட்டாச்சு…பிடிங்க பணத்த’… பங்களாதேஷில் நடந்த கூத்து; பிரதமர் இல்லம் தேடி வரும் பொருட்கள்!
பங்களாதேஷில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் போராட்டம் என்ற பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இதனால், ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் ஷேக் ஹசீனா, சொந்த நாட்டில் இருந்து வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
அதன்பிறகு, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு அமைந்தது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்திற்குள் புகுந்து, அங்கிருந்து பொருட்களை எல்லாம் திருடிச் சென்றனர். ஷோபா, சேர், நகை, பணம் மற்றும் அவரது ஆடைகள் என அவரது மாளிகையே சூறையாடப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மாணவர்களின் விருப்பப்படி, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டதால், திருடிய பொருட்களை மீண்டும் கொண்டு வந்து வைக்குமாறு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை, ஏற்று திருடு போன பொருட்கள் ஒவ்வொன்றாக, அரசு இல்லமான ஞானப பனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்காக, மாணவர்கள் சார்பில் நுழைவு வாயிலில், திருடு போன பொருட்களை பெறுவதற்காக கவுன்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
நாற்காலி , ஷோபா, மேஜை, ப்ரிட்ஜ், ஆப்பிள் ஐமேக், , ஐபோன்கள், ஜிம் உபகரணங்கள், கிட்டார், புறாக்கள், பூனை என பல பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அதிலும் ஒருவர் எடுத்துச் சென்ற வாத்தை சமைத்து உண்டு விட்டதால், அதற்குரிய பணத்தை கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் எடுத்துச் சென்ற சுமார் 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திரும்ப ஒப்படைத்துள்ளார். அதேபோல, நகைகள், வைர மூக்குத்தி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களும் திரும்ப வழங்கப்பட்டது.
இது குறித்து மாணவர்களின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான ஷாகிப் ஆரிப்பின் கூறியதாவது:- பிரதமர் ஷேக் ஹசீனா பதவி வில வேண்டும் என்று தான் போராட்டம் நடத்தினோம். ஆனால், மக்கள் பிரதமரின் இல்லத்தில் நுழைந்து, உணர்ச்சிமிகுதியில் சில பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். மேலும், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டனர். நாங்கள் திருடர்கள் அல்ல. இது அனைத்தும் நமது நாட்டு சொத்து. எனவே, நாம் அதனை மீட்டு, மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம், எனக் கூறினார்.