சீப்பு இல்லை – முடியை வெட்டிக்கொண்ட காஸா சிறுமிகள்: நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தற்போது வரையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அதிகளவான பலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிகளிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காஸாவிலுள்ள சிறுமிகள் தங்கள் முடிகளை வெட்டியுள்ளனர்.
காஸாவில் குழந்தைகளுக்கான நோய்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லோப்னா அல் – அஜைஜா என்பவரிடம் எங்களுக்கு தலைமுடியை சீவுவதற்கு சீப்பு கூட இல்லை எனக் குழந்தைகள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தலைக்கு ஷெம்பூ, சவர்க்காரம் என்று எதுவுமே காஸாவில் இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை.
எனவே குறித்த மருத்துவர், உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் உங்கள் முடியை வெட்டிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
காஸாவில் போரின் நிமித்தமாக, தூய்மை பற்றாக்குறை அதிகரித்துள்ளன.
அங்குள்ளவர்கள் குளிப்பதற்கு கூட போதிய தண்ணீர் வசதி இல்லை. இதன் காரணமாக அங்குள்ள குழந்தைகள் சுத்தத்தை பேண முடியாமல் அழுக்கடைந்து பல நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகின்றனர்.
இஸ்ரேல் ரபா எல்லையைக் கைப்பற்றிய பின்னர், உலக நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற உதவிகள் குறைந்துவிட்டன. இதன் காரணமாக பலஸ்தீனியர்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதோடு, அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
போரின் தாக்கம் ஒரு புறம் இருக்க, போரினால் ஏற்பட்ட இதுபோன்ற நெருக்கடிகள் மக்களை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.