இப்படியும் கொள்ளையடிக்கலாமா? ஜெர்மனியில் ஏடிஎம்கள் வெடி வைத்து தகர்ப்பு!
ஜெர்மனியில் ஏடிஎம் இயந்திரங்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அங்கு ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு ஏடிஎம் இயந்திரம் தகர்க்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, அங்குள்ள பணம் கொள்ளையடித்துச் செல்லப்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது.
ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜெர்மனியில் திருட்டு கும்பல்கள் சில, இதனை வாடிக்கையாகக் கொண்டு செயல்படுகின்றன. அதிக ஆபத்து இல்லாமல், வெடிகுண்டுகள் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை தகர்த்து, எளிதாக பணத்தை கொள்ளையடித்துச் செல்வது இவர்களது வழக்கமாக உள்ளது.
ஜெர்மனியில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் அரங்கேறி வரும் இதுபோன்ற குற்றச்செயல்களை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டாலும் கொள்ளை முயற்சியை கட்டுப்படுத்தத் தவறி வருகின்றனர். ஜெர்மனி மட்டுமன்றி, தற்போது ஐரோப்பா முழுவதும் இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் 50,000க்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டில் இருப்பதும், கொள்ளை முயற்சி அதிகளவில் நடப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
பெரும்பாலும், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளதால் பணத்தை கொள்ளையடித்துவிட்டு வாகனங்களில் பணத்தை எடுத்துச் செல்வதும் திருடர்களுக்கு மிக வசதியாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.