நான் வெற்றி பெற்றால் சஜித், அனுர மற்றும் நாமலுடன் இணைந்து செயற்படத் தயார் – ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததோடு, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.
கொழும்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“எந்தக் கட்சி ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 2028 ஆம் ஆண்டுக்குள் கடனை அடைக்க ஒற்றுமை தேவை என்பதால், நான் வெற்றி பெற்றால் அனைவரையும் என்னுடன் இணையுமாறு அழைப்பேன்,” என்று விக்கிரமசிங்க கூறினார்.
“நான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர், சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை என்னுடன் இணைந்து கொள்ளுமாறு நான் அழைத்தேன், ஆனால் அவர்கள் நிராகரித்தனர், இப்போது வருந்தலாம். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவும் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை பின்பற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
“நாம் அனைவரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டாவதாக, கொள்கைகளில் வேறுபாடு இருந்தாலும், அடிப்படைகளை ஆதரிக்கும் ஒரு அரசியல் அமைப்பு நமக்குத் தேவை. இதுதான் எங்கள் நாட்டில் இல்லாதது, நீங்கள் அனைவரும் விரும்புவது இதுதான்” என்று ஜனாதிபதி கூறியுள்ளார் .