50 வருட அரசியல் வாழ்வை தமிழர்களுக்காக அர்ப்பணித்தவர்: விக்கிரமபாகு நினைவேந்தலில் யாழ் மக்கள் புகழாரம்

50 வருட அரசியல் வாழ்வை தமிழர்களுக்காக அர்ப்பணித்தவர்: விக்கிரமபாகு நினைவேந்தலில் யாழ் மக்கள் புகழாரம்

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்காக மரணிக்கும் வரை குரல் கொடுத்துவந்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தானவுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, சென்ற மாதம் 25 ஆம் திகதி இயற்கை மரணமடை்தார்.

கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர் ஒருவருக்காக – வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டமை இது முதற்தடவையாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில், ஜுலை 27ஆம் திகதி இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்து கொண்டு கருத்துரைத்த, மூத்த எழுத்தாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான மு. ஈழத்தமிழ்மணி, 81ஆவது வயதிலும் விக்ரமபாகு கருணாரத்ன தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே வாழ்ந்த இடதுசாரித் தலைவர் என எடுத்துரைத்தார்.

“தமிழ் மக்களுக்கான உரிமை எந்த காலத்திலும் வழங்கியே ஆகவேண்டும் என்ற அடிப்படை உணர்வு அவரது அடிமனதில் இருந்தது. அதற்காகவே அவர் வாழ்ந்தார்.

அவர் நினைத்திருந்தால் சிங்கள கட்சிகளோடு கூட்டிணைந்து அரசியலில் ஈடுபட்டிருக்கலாம். எனினும் அவர் தனது கொள்கையில் இருந்து மாறவில்லை. சிங்கள மக்கள் விரும்பினால் என்னை ஏற்றுக்கொள்ளட்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். இடதுசாரி கொள்கையுடன் தொடர்ந்து செயற்பட்டார்.”

தமிழர் உரிமைக்காகப் போராடியதன் காரணமாக சிங்கள மக்கள் பலராலும் துரோகி என விமர்சிக்கப்பட்ட விக்ரமபாகு கருணாரத்ன, சரியான அரசியல் பார்வை கொண்ட தலைவராக செயற்பட்டதாகவும் ஈத்தமிழ்மணி புகழராம் சூட்டினார்.

விக்கிரமபாகுவின் ஐம்பது வருட அரசியல் வாழ்க்கை தமிழ் மக்களுக்காகவே அமைந்திருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Oruvan

அதேவேளை தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் சென்ற 4 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் விக்ரமபாகு கருணாரத்னவின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தது.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ் மக்களுக்கு ஓரளவு அதிகாரம் வழங்குவதாக நம்பப்பட்ட மாகாண சபையை பாதுகாப்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் காரணமாக நவ சமசமாஜக் கட்சியின் செயற்பாட்டாளர்களை மக்கள் விடுதலை முன்னணி கொலை செய்த வரலாற்றை ஞாபகப்படுத்தினார்.

“13ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கான தீர்வு அல்ல, தொடக்கப் புள்ளியும் அல்ல நீண்ட தமிழ்த் தேசிய விடுதலை போராட்டத்தில் மூச்சு விடுவதற்கான ஒரு இடமாகவே நாம் நோக்குகின்றோம். 13ஆவது திருத்தத்தின்போது, இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு தென்னிலங்கையில் அதற்கு எதிர்ப்பு வெளியானபோது, இதனை அவர் ஆதரித்தார். அதனை ஆதரித்தமைக்காகவே அன்றைய ஜேவிபியினால் இவரது தோழர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.” என்றும் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை 1988 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன படுகாயமடைந்திருந்தார்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் போராடிய கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜேவிபி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவும் இந் நிகழ்வுக்கு வருகைத் தந்திருந்தார்.

இதேவேளை, வவுனியாவில் உள்ள சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அண்மையில் விக்ரமபாகு கருணாரத்னவிற்கு நினைவேந்தல் நிகழ்வை வவுனியாவில் நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Oruvan
CATEGORIES
Share This