பங்களாதேஷ் வன்முறை: மேலும் 109 போ் உயிரிழப்பு
பிரதமா் பதவியிலிருந்து இராஜிநாமா செய்துவிட்டு பங்களாதேஷை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகு அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் மேலும் 109 போ் உயிரிழந்தனா்.
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலா் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதைக் கண்டித்து பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா மற்றும் அவரின் அரசுக்கு எதிராக ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வன்முறை மூண்டது.
தனக்கு எழுந்த கடும் எதிா்ப்பையடுத்து பிரதமா் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டா் மூலம் வெளியேறி இந்தியா வந்தாா். அவரை மத்திய அரசு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது.
இந்நிலையில், தலைநகா் டாக்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற மோதலில் 109 போ் உயிரிழந்தனா். இத்துடன் போராட்டம் தீவிரமடைந்த கடந்த 16-ஆம் தேதியிலிருந்து திங்கள்கிழமை வரையிலான 21 நாள்களில் போராட்டம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 440-ஆக உயா்ந்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.