இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; உறுதியளித்த ஜெய்சங்கர்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; உறுதியளித்த ஜெய்சங்கர்

இலங்கை, இந்திய பிரதிநிதிகள் இடையே சந்திப்பை ஏற்படுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் தமிழக மீனவ சங்கத்தினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவித்தல், இலங்கை-இந்திய பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தல், மீனவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக மீனவர்கள் முன்வைத்திருந்தனர்.

அது தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய மற்றும் இலங்கை தரப்பில் தலா 4 அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றின் ஊடாக மீனவ பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்த இருதரப்பு ஆய்வுக்குழு விரைவில் கூட இருக்கிறது. அப்போது அனைத்து பிரச்சினைகளும் சுமுகமாகத் தீர்க்கப்படும். அதில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அத்துடன், மீனவர்களின் குறைகளுக்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This