வட,கிழக்கு மக்களின் ஆதரவு சஜித்துக்கே: பொது வேட்பாளர் அவசியமற்றது
வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க உறுதியளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் த.தயானந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் காரியாலயம் கிரான்குளம் பகுதியில் திறந்துவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் தேர்தல் செயற்பாட்டினை நோக்காக கொண்டு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த தயாநந்தன்
“கடந்த காலத்தை பொருத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டிலே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கூட பெற முடியாத சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஜனாதிபதியாக முடியும் என்ற கருத்து அனைவரது மத்தியிலும் காணப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பும் சஜித் பிரேமதாச வெற்றிப் பெறுவதே.
எனவே வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.
உண்மையில் சாதி மதம் இனங்களை கடந்து அனைவரும் ஒன்று என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஒரு தலைவர் இவர் எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் எதிர்கட்சித் தலைவருக்கே வாக்களிக்க வேண்டும்.
கடந்த கால வரலாற்றை உற்று நோக்குகின்ற பொழுது தமிழ் பொது வேட்பாளர் என்பது முன்னாள் பிரதமர் நீதி அரசர் விக்னேஸ்வரன் அவர்களின் தனிப்பட்ட முடிவு.
எதிர்காலத்தில் பிரச்சினையை உருவாக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் தமிழ் பொது வேட்பாளர் என்பது தேவையற்ற விடயமாகவே கருதப்படுகின்றது” என்றார்.
இந்நிகழ்வில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.