கனிய மணல் அகழ்வுக்காக வந்த அரச அதிகாரிகள்: தனி ஒருவராக போராடி வென்ற மக்கள் பிரதிநிதி

கனிய மணல் அகழ்வுக்காக வந்த அரச அதிகாரிகள்: தனி ஒருவராக போராடி வென்ற மக்கள் பிரதிநிதி

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கர் கடற்கரையை, கனிய மணல் அகழ்வுக்காக கையகப்படுத்த வந்த அரச அதிகாரிகள் குழுவை தோற்கடிப்பதில் உள்ளூர் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 31ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அலம்பில் கடற்கரையில், கனிய மணல் அகழ்வு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் வருகை தந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 750 ஏக்கர் காணியில் மணல் அகழ்வு திட்டங்களைத் தயாரிக்க அதிகாரிகள் வருகைத்தந்ததாகவும், இதனால் அப்பகுதியில் மீனவர்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படுமெனவும் முயற்சியை தடுத்து நிறுத்திய வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

“அலம்பில் முதல் தீர்த்தக்கரை வரையில் கனிய மணல் அகழ்வுக்காக ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார்கள். கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தூரத்திற்கு மணல் அகழ்வை மேற்கொள்வதே இவர்களின் திட்டம்.”

மாவட்ட செயலாளரின் அனுமதியுடன் தான் வந்ததாக தெரிவிக்கும் அதிகாரியிடம், குறித்த காணி பொதுமக்களுக்கு சொந்தமானது எனவும் அது தொடர்பில் அரச அதிகாரிகள் எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது எனவும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வலியுறுத்தும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பார்க்கத்தான் வந்தோம்” என அந்த அதிகாரி கூற, “எங்கள் காணியை பார்க்கவும் வேண்டாம்” என ரவிகரனும் அப்பகுதி மக்களும் ஒரே குரலில் கூறுகின்றனர்.

நாங்கள் வர முடியாதா?’’ என மற்றொரு அதிகாரி கேட்டதற்கு, ‘‘நான் மக்கள் பிரதிநிதியாக சொல்கிறேன். நீங்கள் போங்கள்” என அவர் கூற, அதிகாரிகள் பின்வாங்கினர்.

Oruvan

சிங்கள மொழியில் விளக்கமளிக்க முற்பட்ட அதிகாரி ஒருவரிடம் தமிழில் பேசுமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு தமிழ் பேசத் தெரியாவிட்டால் மொழிபெயர்ப்பாளரை அழைத்து வாருங்கள் என துரைராசா ரவிகரன் தெரிவிப்பதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

மாகாணசபை செயற்பட்ட காலத்தில் 16 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் காணியில் கனிய மணல் அகழ்வை நிறுத்தியிருந்ததாகவும், எனினும் மாகாண சபை பதவிக்காலம் முடிந்த பின்னர் அந்த காணியில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் ரவிகரன் தெரிவிக்கின்றார்.

“கொக்கிளாயில் 44 ஏக்கர் காணியை மாகாண சபை இருக்கும் வரை நாங்கள் பாதுகாத்திருந்தோம். ஆனால் மாகாண சபை காலம் முடிந்த பின்னர் வேலி அடைத்து மணல் அகழ்வு இடம்பெறுகிறது. 16 பேரின் தனியார் காணிகள் அதற்குள் இருக்கின்றது. அந்த மக்கள் காணியின்றி இருக்கின்றார்கள்.”

காணியை இழந்த மக்கள் 2022 பெப்ரவரி 12ஆம் திகதி கொக்கிளாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் மக்களின் 44 ஏக்கர் காணியை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட்டின் கொக்கிளாய் பொறித்தொகுதிக்கு முன்பாக நிறைவடைந்தது.

Oruvan

அன்றைய தினம் ஊடகவியலாளர்கள் அந்த இடத்திற்குப் பின்னால் “தொழில் அமைச்சு, லங்கா மினரல் சேண்ட்ஸ் லிமிடெட். கொக்கிளாய் பிளான்ட்” என்ற பெயர்ப்பலகை நடப்பட்டிருந்ததை புகைப்படமெடுத்திருந்தனர்.

கரையோர மீனவர்களை அரசாங்கம் அப்புறப்படுத்துவதாக குற்றம் சுமத்தும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன், குறைந்தபட்சம் பிரதேச மக்களுடன் கலந்துரையாடாமல் அரச அதிகாரிகள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொக்கிளாயில் இருந்து அலம்பில் வரையிலும், அலம்பில்லில் இருந்து தீர்த்தக்கரை வரையிலும் மணல் அகழ்வை மேற்கொள்வதே நோக்கம். இப்படியே இருந்தால் இந்த மக்கள் எங்கு போவது? கரையோரத்தில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் விதமாகவே அரசாங்கத்தின், அரசாங்கத்தின் கீழ் உள்ள திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இந்த மக்களை அங்கு கூப்பிட்டு, சம்மேளனம், அல்லது பிரதிநிதிகள், அல்லது சங்கங்களின் தலைவர்கள் அனைவரையும் கூப்பிட்டு முடிவு எடுத்திருக்க வேண்டும். ஜிஏ, ஏஜியுடன் கதைத்துவிட்டு முடிவை அவர்களே எடுக்கின்றார்கள்.”

வன்னி மீனவர்களின் தொழில் வாய்ப்பைப் பறிக்கும் வகையில் அரச திணைக்கள அதிகாரிகள் செயற்பட்டால் அதற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுக்கின்றார்.

“கடற்கரையில் மக்கள் தொழில் செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களின் தொழிலை நிறுத்துவதுதான் நோக்கம். இந்த திணைக்களங்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தில் கைவைத்தால் நாங்கள் விடமாட்டோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தவேண்டி வரும்.

கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை கனிய மணல் நிறுவனம், வனஜீவராசிகள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நீர்ப்பாசன திணைக்களம், அணை பாதுகாப்பு மற்றும் நீர் வள திட்டமிடல் திட்டம் (DSWRPP), புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் காணி அதிகாரி மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் போராட்டம் காரணமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மணல் அகழ்வுக்காக காணியை பார்வையிடச் சென்ற அதிகாரிகள் புறப்படுவதற்கு முன் கடற்கரையில் புகைப்படம் எடுக்கின்றமையும் காணொளியில் பதிவாகியுள்ளது.

Oruvan
Oruvan
CATEGORIES
Share This