ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் இல்லாத நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவுக்கு தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் இந்த முன்னேற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு முறையாக அறிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் அனைத்து பொலிஸ் உத்தரவுகள், அதிகாரிகளை அனுப்புதல், தளவாட ஏற்பாடுகள் மற்றும் நிதி வழங்கல் ஆகியவை செயலாளரால் நிர்வகிக்கப்படும் என்பதை உறுதிசெய்தார்.
தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் மதிப்பீடுகளை நடாத்துவதற்கும் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு இணைப்பாளர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நிலவரப்படி, மொத்தம் 16 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலிலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
“ஒவ்வொரு வேட்பாளருக்கும் நாங்கள் அச்சுறுத்தல் மதிப்பீட்டை நடத்துவோம், மேலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பான குழுவானது பொருத்தமான பாதுகாப்பை தீர்மானிக்கும்” என்று பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.
முன்னதாக, வேட்பாளர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்தக் குழுவில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைத் தலைவர், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்/தேர்தல் மா அதிபர் ஆகியோர் அடங்குவர்.