இணைய விசா முறை; பாரிய நிதி மோசடியிலிருந்து மீண்டது இலங்கை
இணைய விசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சேவையைப் பெறுவதற்கு அமைச்சரவை குழு மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால், ஏற்படவிருந்த பாரிய நிதி மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
தற்போதுள்ள இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
குறித்த அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்தவே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்தது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் சுயாதீனத்தையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்திய இந்த முடிவு, நாட்டின் குடிமக்களின் தரவை வணிக நிறுவனங்களுக்கு தவறாகப் பயன்படுத்த அனுமதித்தாகவும், அவர்களின் உயிரைப் பணயம் வைக்க இடமளித்துள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டுக்கு 400 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்படும். இந்த மோசடி மூலம், அரசாங்கம் பாதுகாக்க வேண்டிய குடிமக்களின் இறையாண்மையை அப்பட்டமாக காட்டிக் கொடுத்துள்ளது. அரச வருமானம் போலவே நாட்டின் சுற்றுலாத் துறையும் கடுமையான ஆபத்தில் இருந்திருக்கும்.
நாட்டின் எதிர்கால அரசியலின் மிகவும் தீர்மானமிக்க இறுதி நேரத்திலும் கூட, தமது நட்புவட்டார நண்பர்களுக்கு நாட்டின் சொத்துக்களை உறிஞ்சுவதற்கு இடம் கொடுக்கும் அளவுக்கு நடந்து கொள்வதானது இந்த அரசாங்கத்தின் வெட்கக்கேடையே நன்கு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த பாரிய அளவிலான மோசடியைத் தடுக்க, உயர் நீதிமன்றத்தை நாடி, இந்த சட்ட ரீதியான வெற்றியைப் பெற நடவடிக்கை எடுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, பாடலி சம்பிக்க ரணவக்க, சுமந்திரன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களுக்கான நீதியைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்த உயர் நீதிமன்றத்திற்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்.
இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து, வீசா மோசடியை உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள மக்கள் சார் வெற்றியைப் பாதுகாத்து, நாட்டில் விசா வழங்கும் நடைமுறையை சகல தராதரங்களுக்கும் அமைவாக வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.