சுதந்திர கட்சியின் ஆதரவு சஜித்துக்கு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானம்

சுதந்திர கட்சியின் ஆதரவு சஜித்துக்கு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 07ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாகப் பிளவுப் பட்டிருக்கும் சுதந்திரக் கட்சி

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது பெரும் கேள்விக்குறியாகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார்.

சுதந்திரக் கட்சியின் பலரது ஆதரவு உள்ளதாகவும் அவர்களை இணைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவே எதிர்பார்ப்பதாக தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

மறுபுறம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த மாதம் 31 ஆம் திகதி மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டப்பூர்வமான பொதுச்செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ரணில் விக்ரமசிங்கவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதாக வெளியாகிய அறிக்கையை நிராகரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுக்கட்டாயமாக கைப்பற்றி வைத்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால, ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட சிலருக்கு சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்த சட்டப்பூர்வ உரிமை இல்லை எனவும் கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்ற வகையில் கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் இந்த முயற்சிகளை தான் கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

கட்சியின் உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த சில நாட்களாக பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

அரசியல் பிரமுகர்களிடையேயான கட்சித் தாவல்கள், நிலையற்ற தீர்மானம், ஒரே கட்சிக்குள் பல பிரிவுகள் போன்றன, மக்களையும் குழப்பமடையச் செய்கின்றன.

கட்சிகளைக் கடந்து தனிநபா் ஆதரவுகளும் இத் தேர்தலில் விஞ்சிக் காணப்படுகின்றன.

CATEGORIES
Share This