ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு: மோடியின் இலங்கை விஜயம் திடீரென ரத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடியில் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 20ஆம் திகதி மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமரின் விஜயம் குறித்து ஆய்வு செய்திருந்தார்.
அண்மையில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருந்தார்.
பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், கடந்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துவதால் வெளிநாட்டுத் தலைவர்களுடனான தனது கலந்துரையாடல்களை மட்டுப்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள், இரு நாடுகளையும் இணைக்கும் நில இணைப்பு, மின் கட்ட இணைப்பு மற்றும் எரிசக்திக் குழாய் போன்ற இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த இரு நாடுகளும் முன்முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இலங்கையில் எந்த ஆட்சி மாறினாலும், இதுபோன்ற திட்டங்கள் தொடர்வதன் முக்கியத்துவத்தை ஜெய்சங்கர் தனது விஜயத்தின் போது, வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை, மாலைத்தீவு, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளின் தலைவர்களின் திட்டமிட்ட பயணமும் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.