கடும் கருத்து மோதல்: இணக்கப்பாடின்றி முடிந்த கூட்டம் – அடுத்தவாரம் வேட்பாளர் அறிவிப்பு

கடும் கருத்து மோதல்: இணக்கப்பாடின்றி முடிந்த கூட்டம் – அடுத்தவாரம் வேட்பாளர் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க செவ்வாய்க்கிழமை கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் 75 இற்கும் அதிகமான தொகுதி அமைப்பாளர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்த பொதுஜன பெரமுன ஆதரவளிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இவரது நிலைப்பாட்டை பெரும்பாலான தொகுதி அமைப்பாளர்கள் வரவேற்யுள்ளனர். என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட சில எம்.பிகள் பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எனது நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் மாற மாட்டோம். நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும்.

பொதுஜன பெரமுன அதற்குமுழுமையான ஆதரவை வழங்க வேண்டும். எதிர்வரும் வாரம் இதுதொடர்பில் பொதுஜன பெரமுன தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.” என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கருத்து வெளியிடுகையில், ”பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர். அவர் ஜனாதிபதியை ஆதரித்தே கருத்து வெளியிட வேண்டும்.

ஆனால், எமக்கென்று கட்சியொன்று உள்ளது. அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.

கலந்துரையாடலில் கடுமையான கருத்து முரண்பாடுகள் முற்றியிருந்ததாகவும் அதனை மகிந்த ராஜபக்ச சமாதானப்படுத்தியிருந்ததாகவும் தெரியவருகிறது.

CATEGORIES
Share This