மகிந்தவின் கோட்டையில் ராஜவான ரணில்: அவசரமாக வழங்கப்பட்ட ஆலோசனை

மகிந்தவின் கோட்டையில் ராஜவான ரணில்: அவசரமாக வழங்கப்பட்ட ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடுகளை எட்டும் வகையில் கொழும்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் 90 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தில் இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

30 வரையாக எம்.பிகள் மாத்திரமே பொதுஜன பெரமுனவுக்கு சார்பாக இருப்பதாகவும் அதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுக்க உள்ள தீர்மானத்தை ஆதரிக்க 10 இற்கும் அதிகமான எம்.பிகள் தயாராக இருப்பதாகவும் தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்ச சில உடல் உபாதைகளினால் அவதிப்பட்டு வருவதால் அவரால் பல பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவும் பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சிக்குள் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒருவரையோ அல்லது நாடு ஏற்றுக்கொள்ளும் ஒரு நபரையோ தான் பொதுஜன பெரமுன முன்னிறுத்த வேண்டும். அந்த தகுதிகள் அனைத்தும் ரணிலிடம் இருப்பதால் அவரை பொதுஜன பெரமுன ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் 90 எம்.பிகளும் இருப்பதாகவும் தெரியவருகிறது.

ரணிலை ஆதரிக்காவிட்டால் பொதுஜன பெரமுன சிதைந்து போய்விடும் என்றும் அக்கட்சியின் பெரும்பாலானவர்கள் ரணில் பக்கம் தாவிவிடுவர் என கட்சியின் மூத்த தலைவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளனர்.

தற்போது, ​​பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளமை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான பிளவை வெளிப்படுத்துகிறது.

இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அங்கு நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் மாநாடுகளில் பொதுஜன பெரமுனவின் அனைத்து அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களின் எம்.பிகளும் கலந்து கொள்கின்றனர்.

மேலும், விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு வரும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களின் எண்ணிக்கையும் கடுமையாக சரிந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் கட்சியின் எதிர்காலத்தை கருதி விரைவான முடிவுகளை மகிந்த ராஜபக்ச எடுக்க வேண்டுமென மூத்த தலைவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

பொதுஜன பெரமுனவுக்கு ரணிலில் கை ஓங்கியுள்ளதால் மகிந்த ராஜபக்சவின் கோட்டையை ஆளும் ராஜாவாக ரணில் மாறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This