ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் பொன்சேகா: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதை அறிவிப்பார் என அவரது ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
சரத் பொன்சேகாவின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஜகனா கிருஷ்ணகுமார் மற்றும் வெங்கடேஷ் தர்மராஜா ஆகியோர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 7 மற்றும் 9 ஆம் திகதிக்கு இடையில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சரத் பொன்சேகா சுயேட்சை மக்கள் வேட்பாளராக போட்டியிடுவார் என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆதரவை வழங்குவார்கள் என குறித்த இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை சரத் பொன்சேகா முன்னதாகவே அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும்,முறையான அறிவிப்புக்கு முன்னதாக சில விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகதவும், அதன் காரணமாகவே இந்த தாமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதால் அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.