ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் சனிக்கிழமையுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரம புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவா் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தெரிவிக்கையில்,

“ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டவற்றை ஆய்வு செய்யும் நடைமுறைகளை இனிமேல் தான் முன்னெடுக்க வேண்டும்.

எம்மால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களை யாழ். பல்கலையில் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவற்றை விரைவில் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளோம்.

தொல்லியல் ஆய்வினை ஏன் ஆனைக்கோட்டையில் செய்தார்கள் என பலரிடமும் ஒரு கேள்வி இருக்கிறது.  பலருக்கு ஆனைக்கோட்டையின் வரலாறு தெரியாது. இப்பிரதேசம்  வரலாற்று முக்கியத்துவமான இடம்.

ஆனைக்கோட்டையில் 1980 ஆம் ஆண்டு கால பகுதியிலையே ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த ஆய்வு பணிகளின் போது, யாழ்ப்பாணத்தில் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இருவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் கீழ் நிவேதிய பொருட்களையும், முத்திரை மோதிரங்களும் மீட்கப்பட்டன. அவை சிந்து வெளி காலத்திற்கு உரியது. அவற்றில் பிரமி எழுத்துக்களும் காணப்பட்டன. அதில் இன குழுமம் ஒன்றின் தலைவனின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது

அந்த தொல்லியல் பொருட்களை 1998 ஆம் ஆண்டு இழந்துள்ளோம்.

இந்த நிலையிலையே மீண்டும் கடந்த ஜூன் மாதம் முதல் அகழ்வாய்வு பணிகள் மீள மேற்கொள்ளப்பட்டன.

1980களில் நவீன தொழினுட்பங்கள் இருக்கவில்லை. ஆனால் தற்போது நவீன தொழினுட்பங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகள், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த முடியாது.

அதனால் இலங்கையில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களின் உதவியுடன், மிக பிரமண்டமாக  ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அகழ்வாய்வுகளை மேற்கொண்டோம்.

எமது ஆய்வு நடவடிக்கையில் கற்காலத்திற்கு முற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் வாய்ந்தவர்கள்,  என்புகளை ஆய்வு செய்து காலத்தை கண்டறிய கூடியவர்கள் என பலதரப்பட்டவர்களை ஒன்றிணைத்தே முன்னெடுத்தோம்.

இந்த அகழ்வு ஆய்வின் போது புலமையானவர்களின் பங்களிப்புடன், தொல்லியல் மாணவர்களின் பங்கும் மிக முக்கியமாக இருந்தது.

அவர்கள் வகுப்பறையில் கற்பதை விட செயல்முறை ஊடாக கற்பதே சிறந்தது . அதனால் பல மாணவர்கள் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள்” என அவா் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This