இலங்கையில் அதானி பற்றி நன்றாக எழுதும் ஊடகவியலாளர்களுக்கு நிதி உதவி: வெளியான பரபரப்பு செய்தி
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கௌதம அதானி, பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாக இந்தியாவின் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில் அதானி இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்களை சாதகமாக எழுதும் ஊடகவியலாளர்களுக்கு உபசரிப்புகள் இடம்பெறுவதாக லங்கா சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பல ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஊடக செயல்பாட்டாளர்களுக்கு இதற்காக நிதி உதவிகள் மற்றும் இலவச இந்திய பயணங்கள் வழங்கப்படுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கௌதம அதானியின் திட்டங்களுக்கு மறைமுக ஆதரவை வழங்குவதும், இந்திய திட்டங்களை அவர் நடத்தும் விதத்தைப் பாராட்டுவதுமே இந்தப் பணியின் முதன்மையான நோக்கம்.
கடந்த சில நாட்களாக, இலங்கையில் உள்ள செய்தித்தாள்கள் உட்பட பல ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் அதானியால் இயக்கப்படும் மும்பையில் உள்ள முந்த்ரா துறைமுகம் மற்றும் விஷிம்ஜிம் நிலையங்களைப் பாராட்டி நீண்ட கட்டுரைகளை எழுதினர்.
இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் இதற்காக ஆதரவைப் பெற்றுள்ளனர். அதானியின் திட்டங்கள் பற்றி இலங்கை மக்களிடையே முடிந்தவரை நல்ல பிம்பத்தை உருவாக்குவது இவர்களின் திட்டமாகும் என்றும் லங்கா சி நியூஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கப்பட உள்ள அதானியின் திட்டங்களை ஆதரித்து அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிடுவதும் இவர்களது நோக்கமாக உள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.