ரணிலின் புதிய கூட்டணி: அடுத்தவாரம் வெளியாக உள்ள அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
ரணில் விக்ரமசிங்க பல கட்சிகளின் கூட்டணியுடன் பொது வேட்பாளராக தேர்தலில் களமிறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுளளார்.
பொதுஜன பெரமுனவில் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் பிரதி, இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்களும் ரணிலின் கூட்டணியில் இணைந்துகொள்ளும் உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சகத்தியிலிருந்து 15 முதல் 20 பேர்வரை ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ச்சல் சரத் பொன்சேகா உள்ளிட்டோரையும் தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் வகையில் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை உருவாக்கி வருகிறது.
இவ்வாறாக பின்புலத்தில் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் தமது கூட்டணியை வெளிப்படுத்தும் முயற்சிகளில் ரணில் விக்ரமசி்ங்க தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.