தேர்தல் திகதி அறிவிக்கும் அதிகாரம் அடுத்த வாரம் ஆணைக்குழுவுக்கு

தேர்தல் திகதி அறிவிக்கும் அதிகாரம் அடுத்த வாரம் ஆணைக்குழுவுக்கு

சட்ட மற்றும் நிதித் தடைகள் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் திறன் குறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்து வரும் நிலையில், அவ்வாறான தடைகள் எதுவும் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலைத் தொடர்வதற்கு தமக்கு சட்டப்பூர்வ அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அரசாங்க அச்சக திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நிதி தொடர்பான விடயங்கள் பற்றியும் கலந்துரையாரடப்படும்” என்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தற்போது சட்ட ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ எந்த தடையும் இல்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 17 மற்றும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட நாளொன்றில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This