இறுதி நேரத்திலாவது தமிழருக்கு ரணில் எதையாவது செய்வாரா?

இறுதி நேரத்திலாவது தமிழருக்கு ரணில் எதையாவது செய்வாரா?

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர்காலத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்தால் எதையெல்லாம் செய்வோம் என்ற வாக்குறுதிகளை மட்டும்தான் வழங்க முடியும்.ஆனால் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு செயல் மூலம் சில விடயங்களை செய்துகாட்ட முடியும்.எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்ட மூலங்களையும் மிக விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான இரா. சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற மதுவரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் பேசுகையில்,

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது இந்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தன்னால் எந்தத்தடையும் இல்லை என்று கூறினார். அவ்வாறானால் நாம் அவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம் .

மாகாணசபை முறைமையில் எல்லை நிர்ணயங்கள் என்ற விடயம் தற்போது வரை குழப்பகரமானதாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு சுமந்திரன் எம்.பி.யினால் ஒரு தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது .

சுமந்திரன் எம்.பி.யின் இந்த தனிநபர் பிரேரணையை அரசு ஒரு சட்டமாக முன்னெடுக்குமாகவிருந்தால் இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கின்றார் என்றதொரு செய்தியை கொடுக்க முடியும்.

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை, எதிர்காலத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்தால் எதையெல்லாம் செய்வோம் என்ற வாக்குறுதிகளை மட்டும்தான் வழங்க முடியும். ஆனால் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு செயல் மூலம் சில விடயங்களை செய்துகாட்ட முடியும்.

அதேபோல்தான் மாகாணசபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களைப்பற்றி ஆராய்வதற்காக பிரதமர் தலைமையில் ஒரு .குழு நியமிக்கப்பட்டது.அதேபோல் தென் மாகாணத்திலிருக்கும் முன்னாள் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் தயாரித்த அறிக்கை ஒன்றும் உள்ளது.இந்த அறிக்கையூடாக தென் மாகாணத்தில் உள்ளவர்களும் இணங்கிய விடயங்கள் .

ஜனாதிபதி தற்போது 75 க்கும் மேற்பட்ட சட்டமூலங்களை சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றி வருகின்றார். அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்ட மூலங்களையும் மிக விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் அது ஜனாதிபதி அதிகாரத்தில் இருக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்கின்றார் என்ற செய்தியை சொல்லும் என்றார்.

CATEGORIES
Share This