ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி
இந்தியா, ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய இராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டது. முதலில் கைக் குண்டுகளை வீசிய பயங்கரவாதிகள் அதன் பின்னர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்ததோடு, 6 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கத்துவா நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்னோட்டா கிராமத்தில் குறித்த இராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி காட்டு வழியே தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அப் பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.