”கொள்கைகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன்“: ராஜபக்ச தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயாராக உள்ளேன். இலங்கையின் மிக பலம் வாய்ந்த கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே கட்சியின் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கும். கட்சியின் தீர்மானத்திற்காக காத்திருக்கிருக்கின்றேன்” என்றார்.
அத்துடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான பணிகளை முன்னதாகவே ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அதிகாரத்திற்காக போட்டியிடும் அனைத்து அரசியல்வாதிகளும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இதுவரை வெளிப்படுத்தவில்லை. நான் ஏற்கனவே எனது கொள்கைகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளேன். இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை மக்களுக்கு விளக்குவதற்கு 60 நாட்களே தேவை எனவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
”டிபி கல்வித் திட்டத்தின் கீழ் தனது கொள்கைகள் மூலம் கல்வித்துறையின் வளர்ச்சியில் உள்ள பிரச்சினைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து 10,000 பாடசாலைகளுக்கும் சமமான கல்வியை வழங்குவதற்காக டிபி கல்வித் தளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மாத்திரமே வழங்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான தனது கொள்கைகளின் ஊடாக தமக்கு விருப்பமான ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்காத பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.