நல்லிணத்தை விரும்பாத தென்னிலங்கை: இரா.சம்பந்தனின் மரண செய்தியை உணர்வார்களா?

நல்லிணத்தை விரும்பாத தென்னிலங்கை: இரா.சம்பந்தனின் மரண செய்தியை உணர்வார்களா?

இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்க இடம்பெற்றுவந்த பல முயற்சிகள் தோல்வியடைந்து நல்லிணக்கம் என்பது ஓர் அந்நிய வார்த்தை என்ற நிலைமை உருவாகிவிட்டது.

பிளவுபடாத இலங்கைத் தீவுக்குள் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றி பல தசாப்தங்கள் பேசிவந்த ஆளுமையும் பெருந்தலைவருமான இரா.சம்பந்தனும் உயிரிழந்துவிட்டார்.

புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எந்தவொரு கட்சியும் இதயசுத்தியுடன் நேர்கோட்டில் பயணித்து தீர்வுகாண விருப்பியிருக்கவில்லை அல்லது நல்லிணத்தை ஏற்படுத்த தயாராக இருந்திருக்கவில்லை என்பதையே இரா.சம்பந்தனின் மரண செய்தி உணர்த்துகிறது.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொடுத்துவிட வேண்டுமென தென்னிலங்கை சிங்களத் தலைமைகளிடம் எவ்வளவு தூரம் இணக்கப்பாட்டுடன் செயல்பட முடியுமோ அவ்வளவு தூரம் சுமூகமாக இரா.சம்பந்தன் செயல்பட்டிருந்தார்.

தந்தை செல்வநாயகம் கூறியது போன்று “தமிழர்களின் எதிர்காலம் இனி கடவுளின் கையில்தான் உள்ளது” என்று சிந்திக்கும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சம்பந்தனை போன்று ஒரு பொறுமைசாளியை தென்னிலங்கை அரசியல்வாதிகள் இனி காண்பார்களா எனத் தெரியவில்லை.

1956ஆம் ஆண்டு மொழிப்பிரச்சினை ஆரம்பமாகியது முதல் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை பல்வேறு வழிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளும், அடக்குமுறைகளும் தொடர்ந்தன. அதன் பின்னரும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஆளும் அரசாங்கங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

யுத்தத்திற்குப் பின்னர் முன்னெடுக்கவேண்டிய நல்லிணக்க முயற்சிகள் தோல்விகண்டமையே பொருளாதார நெருக்கடிகள் முதல் பல்வேறு நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுக்க பிரதான காரணமாக உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டின் பின் உருவான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்களும் முன்னின்று ஆதரவளித்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ் தலைமைகள் ஈடுபட்டன. ஆனால், தென்னிலங்கை அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தயாராக இல்லை என்பதால் அந்த முயற்சிகள் பாரிய தோல்வியில் முடிவடைந்ததுடன், இன்றுவரை மாகாண சபைத் தேர்தலையும் நடத்த முடியாதுள்ளது.

2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவால் கொண்டுவரப் பட்டிருந்த கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றில் தீயிட்டுக் கொளுத்திய கருமை படிந்த வரலாறுகளை தமிழ் மக்கள் மறக்காதிருந்த போதிலும், தேசிய நல்லிணக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தற்போதையும் அப்போதைய பிரதமருமான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தலைமைகள் கைகோர்த்து செயல்பட்டிருந்தன.

அன்று அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தாலும் இன்று ரணில் விக்ரமசிங்கதான் நாட்டின் ஜனாதிபதி. அவர் முழு முயற்சியில் இறங்கினால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தையேனும் அமுல்படுத்த முடியும்.

தமிழ் தரப்புடன் இதற்காக ஒருசில பேச்சுகளில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈடுபட்ட போதிலும் அதனை பின்னர் கைவிட்டுவிட்டார். ஆனால், வரலாற்றை மாற்றியமைப்பற்கான சந்தர்ப்பமே ரணில் விக்ரமசிங்கவுக்கு கிட்டியுள்ளது.

தேசிய ஒற்றுமைக்காக பாடுபட்ட பெருந்தலைவராக உள்ள இரா.சம்பந்தனின் மரண செய்தியாகவேனும் இதனை உணர்ந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட வேண்டும். 1977ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதிருக்க ஒரு காரணகர்த்தாவாகும்.

கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் நல்லிணக்க விடயங்களையும் அதிகாரப் பகிர்வையும் ஆளுங்கட்சிகள் அல்லது எதிர்க்கட்சிகள் எதிர்த்தே வந்தன. ஆனால், இன்று அனைத்து பிரதானக் கட்சிகளும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த ஆதரவளித்துள்ளன. குறிப்பாக தேசிய மக்கள் சக்திகூட ஆதரவளித்துள்ளது.

எனவே, இத்தருணத்தில் நல்லிணக்கம் மீது உண்மையான அக்கறை கொண்டவராக ரணில் விக்ரமசிங்க இருந்தால் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுடனேயே அவர் அதனை செய்ய முடியும்.

ஆளுங்கட்சியும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த காலகட்டம் இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு பொன்னான வாய்ப்பாகும்.

1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டிருந்த தருணத்தில் வடக்கு,கிழக்கில் முறையாக அமுல்படுத்தப்பட்டிருக்குமாயின் இலங்கையின் நிலை இன்று சர்வதேச அரங்கில் வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு கருத்தையும் அதிகாரம் இல்லாதபோது அரசியல் சுயலாபங்களுக்காக இன்னொரு கருத்தையும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் காலங்காலமாகத் தெரிவித்து வருகின்றமையாலேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயம் எட்டாக்கனியாகவுள்ளது.

ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்து அபிவிருத்தியில் முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் படுமோசமான கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அபிவிருத்தியும், தேசிய நல்லிணக்கமும் இலங்கையில் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளமையே இதற்கான காரணம்.

ஆளும் தலைமைகளால் இலங்கை பல்லின, பல்மத கலாசாரத்தைக்கொண்ட நாடு என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சர்வதேச தலையீடுகளும் அழுத்தங்களும் இலங்கையில் தொடர்ந்து நிலைகொள்ளக் காரணமும் இதுவே.

இலங்கையை பல்லின சமூகம் வாழும் நாடாகவும், மதச்சார்பற்ற நாடாகவும் பிரகடனப்படுத்தும் போதே “இலங்கையர்கள்“ என்ற நாமத்தை அனைவரும் உணர்வுடன் சுமந்துகொண்டு பயணிக்க முடியும். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சியெனத் தொடர்ந்து இனவாதப் போக்கைக் கைவிட மறுப்பதானது, வரலாற்றுத் தவறாகவே மாறும்.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எதிரெதிர் திசையில் பயணித்த தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ள நிலையில், இன்னமும் ஒரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வராது சமகால அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்பது உண்மையான நல்லிணக்கத்தை விரும்பாததாலான என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பெரும்பான்மைத் தலைமைகள் புரிந்துகொள்ளவில்லை என்பதே யதார்த்தம். இரா.சம்பந்தனின் மரணமாவது அதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சு.நிஷாந்தன்

CATEGORIES
Share This