சோசியல் மீடியா முதல் அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரம் வரை’ – விஜய் கூறியது என்ன?
கடந்த 22-ந் திகதி 50-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், நடிகை த்ரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையானது. அதற்கு சமூக ஊடங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போது சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு இருவருமே பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் சமூக ஊடகங்கள் குறித்து விஜய் பேசினார். த்ரிஷாவின் புகைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் பேசினார் என்றே பார்க்கப்படுகிறது.
விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது,
படிக்கும் போதே மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும். தினமும் செய்திதாளை படிங்கள். ஒரே செய்திய ஒரு செய்தி பத்திரிகை ஒரு மாதிரியும், மற்றொரு செய்தி பத்திரிகை வேறு மாதிரியும் எழுதுவாங்க. இங்க செய்தி வேற கருத்து வேற என்பது உங்களுக்கு தெரியவரும். சமூக ஊடங்களில் இப்போ எல்லாம் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டுகிறது. இதை எல்லாம் பார்த்து எது உண்மை, எது பொய் என்பதை மட்டும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போதான் உண்மையிலேயே நாட்டில் என்ன பிரச்சனை, நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அது தெரிந்தாலே ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல், எது சரி, எது பொய் என்று ஆராய்ந்து பார்த்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். பெற்றோருக்கு அடுத்தபடியாக நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.. தவறான பழக்கவழக்கத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.. ஈடுபட கூடாது என்றார்.