ஜனாதிபதியுடன் கைகோர்க்கும் சரத் பொன்சேகா; கொழும்பில் இன்று நடைபெறும் பிரமாண்ட விழா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ள உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிவந்தன.
என்றாலும், அதனை அவர் மறுத்துவந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான ரகசிய நகர்வுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
“அரகலய“ போராட்ட குழுக்களால் உருவாக்கப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக சரத் பொன்சேகா, அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்புலத்தில் அவர் எழுதியுள்ள நூல் ஒன்றின் வெளியீட்டு விழா இன்று (28.06.2024) வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற உள்ளது.
இந்த விழாவின் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இந்த விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் எவரும் விழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.
இதன் காரணமாக சரத் பொன்சேகா விரைவில் அரசாங்கத்துடன், இணைந்துக்கொள்வார் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.