மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நினைவஞ்சலி
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5 வருட நினைவுதினத்தை முன்னிட்டு குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர்களை வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 5வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சீயோன் தேவாலயத்தில் போதகர் மகேசன் ரொசான் தலைமையில் விசேட ஆராதனையுடன், உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்தனையும் நடைபெற்றது.
அதேவேளை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தேவாலயம் இதுவரை புனர்நிர்மாணம் செய்யப்படாமல் பூட்டப்பட்டு இருந்துவருகின்ற நிலையில், அத்தேவாலயத்துக்கு இன்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்று, மலர்களை வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.