“அரகலய“வின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும்: ரணிலை ”நரி” என்கிறார் ஜேவிபி உறுப்பினர்

“அரகலய“வின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும்: ரணிலை ”நரி” என்கிறார் ஜேவிபி உறுப்பினர்

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொழும்பு காலி முகத்திடல் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும் என ஜேவிபி எனும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

முதலாவது கட்டத்தில் காகத்தையும் , மயினாவையும் வீட்டிற்கு அனுப்பினாலும் கூட பொல்லாத நரி ஒன்று அதிகாரத்திற்கு வந்தது. இந்த காகம், மயினா அனைத்தையும் துரத்தி விட்டு மனிதாபிமானம் உள்ள ஜனாதிபதி ஒருவரை நியமித்து, அதேபோல் நாடாளுமன்றத்திலும் தேசிய மக்கள் சக்தி பதவி வகிப்பது உறுதி என முப்படைகளின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஹப்புத்தளையில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்தார்.

ஜே.ஆர் காலத்திலிருந்து நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி அழிவுகரமாகவுள்ளதாகவும், அப்பதவியின் அதிகாரங்களை பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு அதிகளவிலான வரியை சுமத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சொத்துவரி எனும் போர்வையில் அசாதாரண ஒரு வரியை செயற்படுத்த அதிகாரிகள் தயாராகி வந்தாலும் கூட தேசிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது தோல்வியடையச் செய்யும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“எங்கள் ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மக்களை ஆபத்தான சூழ்நிலையில் இருந்து மீட்கும்.

2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில், 904 பில்லியன் ரூபா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வருவாயை அதிகரிப்பதும், செலவுகளைக் குறைப்பதும் தான் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை என்று அவர் வலியுறுத்தினார்.

2024 வரவு செலவுத் திட்டத்தில் நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சஜித்தின் தாயாருக்கு 1100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வ வீடுகள், வாகனங்கள் மற்றும் ஊடக பிரிவு வழங்கப்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் பானங்கள் கூட பொதுமக்களின் பணத்தில் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் முதலாவது அமைச்சரவைத் தீர்மானமாக இவ்விடயங்கள் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This