இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும்

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழில்கட்சியின் சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும்- பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மே 2009க்கு முன்னதாகவும் மே 2009 இன் போதும் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக இதுவரை எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை என்பது உண்மையாகவே நம்பமுடியாத விடயமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்,ஆயிரக்கணக்கில் எங்கள் மக்கள் மணலில் குறுகியி நிலப்பரப்பில் தஞ்சமடைந்திருந்ததையும்,மருத்துவமனைகள் மீதும் செஞ்சிலுவை சங்கத்தின்மீதும் வேண்டுமென்றே எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றதையும்,உயர் பாதுகாப்பு வலயங்கள் எனப்படுபவையையும்,தமிழ் ஆண்களும் பெண்களும் எதிர்கொண்ட சித்திரவதைகள் பாலியல் வன்முறைகளையும் நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஒரு முழுதலைமுறை குடும்பங்கள் இல்லாமல் வளர்கின்றது ,ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் யுத்தத்தினால் ஏற்பட்ட உள உடல் காயங்களுடன்வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இதனை இவ்வளவு விரிவாக நினைவுபடுத்தவிரும்பவில்லை ஆனால் எங்கள் வரலாற்றை நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கை ரோம்சாசனத்தில் சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்தில்கையெழுத்திடாதது ஏமாற்றமளிக்கின்றது ,ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் படுகொலைகள் இடம்பெறும்வேளை தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய டேவிட்மில்லிபாண்ட் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் தனது கரங்களை உயர்த்த முயன்றார் எனக்கு இது ஞாபகம் இருக்கின்றது,அப்போதைய பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுனுடன் இது பற்றி பேசசென்றிருந்த தமிழர்களில் நானும் இடம்பெற்றிருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சர் அக்காலப்பகுதியில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடன் காணப்பட்டார்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைமை குறித்து ஐநாவின் அனைத்து சபைகளும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்  என தான் கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார் என உமாகுமரன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவங்கள் இடம்பெற்றுமுடிந்து 15 துயரமான வருடங்களாகிவிட்டன,ஆனால் தொழில்கட்சி நீதிக்காக பரப்புரை செய்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை,

எங்களின் கட்சியின் பல உறுப்பினர்கள் தங்கள் தொகுதிமக்களிற்காக குரல்கொடுத்துள்ளனர், தமிழ் மக்களின் நீதிக்காக போராடியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் தமிழர்களிற்கு ஆதரவாக செயற்படவேண்டும்,அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை செவிமடுக்கவேண்டும் என தொழில்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட்லம்மி வேண்டுகோள் விடுத்துவருகின்றார் எனவும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் தொழில்கட்சியின் தற்போதைய தலைவரும் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என நாங்கள் எதிர்பார்ப்பவருமான கெய்ர் ஸ்டார்மெர் அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்காக நாங்கள் பாடுபடவேண்டும் என  தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தரசமாதானம் நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு குறித்து பிரிட்டனின் தொழில்கட்சி தெளிவானஉறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

தமிழர்களிற்கு கிடைக்கவேண்டிய பொறுப்புக்கூறல் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் தொழில்கட்சி ஏற்கனவே ஆதரவை வெளியிட்டுள்ளது,தொழில்கட்சி ஆட்சியமைத்தால் அதன் வெளிவிவகார கொள்கைகளில் முன்னுரிமைக்குரிய விடயமாக இது காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை நான்காம் திகதி நான் தெரிவுசெய்யப்பட்டால் நான் ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தீவிரஈடுபாட்டை பேணுவேன்,குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அரசசார்பற்ற அமைப்புகளுடன் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம்  குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்,பாலஸ்தீனத்தில் தற்போது நடைபெறும் விடயங்கள் குறித்து எனது கருத்து இதுவே -துயரத்தில் சிக்குண்டவர்கள் உயிரிழந்தவர்களிற்கான நீதியை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்கான ஆதரவை ஏனைய நாடுகளிடமிருந்து பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளிற்காக நான் பரப்புரை செய்வேன் என தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This