நீர்கொழும்பில் பல நாடுகளை இலக்குவைத்து பாரிய இணைய நிதி மோசடி அம்பலம்: 54 இலட்சங்களை இழந்த பெண்
நீர்கொழும்பு பொரதொட்ட பகுதியில் உள்ள சொகுசு வீடொன்றை சுற்றிவளைத்த விசாரணை அதிகாரிகள் 19 பேரை கைது செய்ததுடன், 52 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 33 கணினிகளையும் கைப்பற்றினர்.
இந்த செய்தியானது நேற்று செவ்வாய்க்கிழமை இணையத்தை ஆட்கொண்டிருந்தது.
நாம் அனைவருமே ஏதோவொரு வகையில் சமூக ஊடகங்களுக்கும் எமது கையடக்க தொலைபேசியில் காணப்படும் சில செயலிகளுக்கு அடிமையாகித்தான் இருக்கின்றோம்.
ஆனால், எம்மை அறியாமல் நாம் செய்யும் லைக் மற்றும் கமெண்ட்களுக்கு பணம் சம்பாதிக்க முடியும் என கூறினால் எப்படி இருக்கும்?
ஆம், அப்படி கூறிதான் உலகளாவில் ரீதியில் நடந்த மோசடி ஒன்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவரினால் உலகறியப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
இனந்தெரியா நபர் ஒருவரால் பாதிக்கப்பட்ட பெண், வட்ஸ்எப் குழு ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நிலையில், டிக்டொக் சமூக ஊடக வலையமைப்பில் வீடியோக்களில் லைக்குகள் மற்றும் கருத்துகளை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று மர்ம குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவிற்கு குறித்த பெண் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வட்ஸ்அப் மற்றும் டிக்டொக்கில் நடந்தது என்ன?
குறித்த சமூக ஊடகங்களின் வாயிலாக அந்த மர்ம குழுவினால் லிங்குகள் அனுப்பப்படுவதாகவும், அதை லைக் கமண்ட் செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் லைக் மற்றும் கமெண்ட் செய்ததற்காக தலா 750 ரூபாய் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
தொடர்ந்து அந்த மர்ம குழுவினரால் டெலிகிராம் குழுவில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்யுமாறு அந்த பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, பணத்தை முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து முதலீடு செய்தப் போதிலும் அதற்கான இலாபம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட குழுவின் அட்மின், பணத்தைப் பெறுவதற்கு, வங்கிக் கணக்கில் ஒரு தொகை பணத்தை மீண்டும் வரவு வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, குறித்த பெண் பல தடவைகள் முதலீடு செய்யதன் அடிப்படையில் சுமார் 54 இலட்சம் ரூபாவை அந்த வங்கிக் கணக்கிற்கு மொத்தமாக செலுத்தியுள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி இலாபம் செலுத்தப்படவே இல்லை. இதனால் சந்தேகமுற்ற பெண் பொலிஸாரை நாட திட்டமிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு துறைக்கு தெரிவித்த பெண்
இதனடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையிடம் இவர் எதிர்கொண்ட விடயங்கள் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளார்.
திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பலர் இது தொடர்பான மோசடியில் சிக்கியதும், மோசடியாளர்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு இரண்டு வங்கிக் கணக்குகளை திறந்ததும் விசாரணையின் அடிப்படையில் தெரியவந்தது.
ஒன்லைனில் மேற்கொள்ளப்பட்ட பீட்சா ஓடர்
சம்பந்தப்பட்ட குறித்த இரண்டு வங்கிக் கணக்குகள் ஊடாக ஒன்லைனில் வழங்கப்பட்ட பீட்சா ஓடர் தொடர்பில் புலனாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றுக்கு பீட்சா ஓடர் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்று (25) இரவு விசாரணை அதிகாரிகள் குறித்த வீட்டில் சோதனை நடத்தினர்.
இதன்போது, இந்த இணைய மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 19 பேரை கைது செய்த விசாரணை அதிகாரிகள், மோசடிக்கு பயன்படுத்திய 57 கைப்பேசிகள், 13 கணினிகள் மற்றும் 3 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட நிதி மோசடி அம்பலம்
கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான், அல்ஜீரியா, நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், நீர்கொழும்பு பொரதொட்ட பகுதியில் உள்ள மற்றொரு சொகுசு சுற்றிவளைத்த விசாரணை அதிகாரிகள் 14 பேரை கைது செய்தனர். அதில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், குறித்த சொகுசு வீட்டிலிருந்து 52 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 33 கணினிகளையும் கைப்பற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவர்
இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசிய பிரஜைகளும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த மர்ம குழுவின் கிளைகள் துபாய் மற்றும் ஆப்கன் நாடுகளில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பல முறைக்ககேடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அவதானம் தேவை!!
நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது வெறுமனே கவனயீனமுற்ற நிலையில் பல விளம்பரங்களில் ஏஐ தொழிநுட்ப விளையாட்டுக்கள் என அனைத்திலும் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆனால், அவ்வாறான செயற்பாடுகள் எம்மை அறியாமலே நாம் இணைய மோசடிகாரர்களினால் கண்காணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.