எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார்; ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா
இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு எதிராக அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தயாராகி வரும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
“இலங்கை சரியான அரசியல் திசையில் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது, எங்கள் தாய்நாட்டின் சார்பாக நான் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், ஊழலை அம்பலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசியல் விருப்பம் உள்ள ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இதுவரை எந்தத் தலைவரும் அப்படிச் செய்ததில்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு அமையும்“என நான் நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.