இலங்கை நோக்கி வந்த விமானம் கடத்தப்பட்டது: மர்மமான முறையில் ஈரானில் தரையிறக்கம்

இலங்கை நோக்கி வந்த விமானம் கடத்தப்பட்டது: மர்மமான முறையில் ஈரானில் தரையிறக்கம்

காம்பியாவை தளமாகக் கொண்ட குத்தகை நிறுவனமான மக்கா இன்வெஸ்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு ஏர்பஸ் ஏ340 விமானங்களை அடையாளம் தெரியாத தரப்பினர் ஈரானில் தரையிறக்கி வெற்றிகரமாக கடத்தியுள்ளனர்.

குறித்த விமானங்கள் லிதுவேனியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், ஈரானில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் ஒன்று மெஹ்ராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும், மற்றொன்று தெற்கு ஈரானில் உள்ள சார்பஹாரில் உள்ள கொனாரக் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் லிதுவேனிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இரண்டு விமானங்களும் ஈரானிய வான்பரப்பிற்குள் நுழைந்தவுடன், அவற்றின் இறுதி நிலைகளைக் கண்காணிப்பதைத் தடுக்க, அவற்றின் டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்நாட்டின் விமான நிறுவனமான மஹான் ஏரில் விமானங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் குறித்த இரு விமானங்களையும் கடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மக்கா இன்வெஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு ஏர்பஸ் ஏ340 லிதுவேனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் பிலிப்பைன்ஸ் செல்ல வேண்டியுள்ளது. எனினும், குறித்த விமானம் தனது இலக்கை அடைவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

“இந்த விமானம் பிலிப்பைன்ஸுக்கு பறக்க வேண்டும், ஆனால் அது ஈரானிலும் முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதைத் தடுக்க நாங்கள் சக்தியற்றவர்கள்.

அதனால்தான் முதல் வணிக விமானம் ஈரானில் தரையிறங்கியதை அறிந்ததும் நாங்கள் குறித்த விமானத்தை புறப்பட அனுமதிக்கவில்லை” என்று லிதுவேனியாவில் உள்ள சியாலியா விமான நிலையத்தின் இயக்குனர் அவுரேலிஜா குயெசாடா தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டிலும் இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

நான்கு வணிக ஏர்பஸ் ஏ340 விமானங்கள் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து உஸ்பெகிஸ்தானை நோக்கி புறப்பட்டன, ஆனால் ஈரானிய வான்வெளியை நெருங்கி, அவற்றின் டிரான்ஸ்பாண்டர்களை நிறுத்தி ஈரானில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

ஈரான் மீதான பொருளாதார தடைகள் காரணமாக, ஈரானிய வணிக விமான நிறுவனங்கள் புதிய வணிக விமானங்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைகள் வணிக விமானத் துறையில் நெருக்கடிக்கு வழிவகுத்தன, சுமார் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் பறக்க முடியாத நிலையில் உள்ளன.

தொழில் வல்லுநர்கள் ஈரானுக்கு 400 புதிய வணிக விமானங்கள் தேவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் பொருளாதாரத் தடைகள் புதிய விமானங்களை வாங்குவதைத் தடுக்கின்றன மற்றும் ஏற்கனவே உள்ள விமானங்களின் மேம்படுத்தல்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தடுக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகள் நாட்டிற்குள் விமான விபத்துக்கள் அதிகரிக்க வழிவகுத்தன.

ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, 1979 இல் இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதிலிருந்து, விமான விபத்துக்களால் 1,755 உயிரிழப்புகள் பதவிவாகியுள்ளன.

தேசிய விமான நிறுவனமான ஈரான் ஏர், 335 விமானங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் அவற்றில் பாதி உதிரி பாகங்கள் கிடைக்காததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

CATEGORIES
Share This