பிரதான கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்குவது உறுதி; மூடிய அறைக்குள் ஜெய்சங்கரிடம் கூறிய ரணில்

பிரதான கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்குவது உறுதி; மூடிய அறைக்குள் ஜெய்சங்கரிடம் கூறிய ரணில்

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் கூட்டணியில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும், தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பின்னர் மேலும் சாதகமான பல மாற்றங்கள் தேசிய அரசியலில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பிரத்தியேக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார சாதக தன்மைகள் குறித்து தெளிவுப்படுத்த உள்ளார். இதன் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பெரும்பாலும் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை டெல்லியில் சந்தித்து வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று முதலாவது விஜயமாக கடந்த வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியின் விசேட செய்தியுடனேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்தார். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை இராஜதந்திர வழிமுறைகளுக்கு அமைய சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், இரு தரப்பு கலந்துரையாடலுக்கு அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கிடையில் மாத்திரம் பிரத்தியேகமான விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன் போது உத்தேச தேர்தல்கள் மற்றும் நாட்டின் அரசியல் – பொருளாதார ஸ்தீரதன்மைக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தேச ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் கூட்டணியின் முன்னேற்றங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வினாவியுள்ளார்.

பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குறிய வகையில் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அந்த கூட்டணியில் பொது வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் குறிப்பிட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்புடன், மேலும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்க உள்ளார். இந்த அறிவிப்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னெடுப்புகளில் உள்ள பன்னாட்டு கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமையை அறிவிக்க உள்ளார்.

இலங்கையின் கடன் மேலாண்மை வசதிகளில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முழுமையான ஒத்துழைப்புகளுக்கு உறுதியளித்துள்ளன.

குறிப்பாக சர்வதேச கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தம் இருநாட்களுக்குள் கைச்சாத்திடப்பட உள்ளது. இந்த தகவலையும், இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் நாடு அடைந்த பொருளாதார வெற்றிகளையும் நாட்டு மக்களுக்கு கூறவுள்ள ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி தேர்தல் குறித்தும் தெரியப்படுத்த வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This