போர் வெடித்தால் பரஸ்பரம் உதவ ரஷ்யா – வட கொரியா ஒப்பந்தம்

போர் வெடித்தால் பரஸ்பரம் உதவ ரஷ்யா – வட கொரியா ஒப்பந்தம்

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால் மற்ற நாடு உடன் அனைத்து இராணுவ உதவிகளையும் வழங்கும் வகையில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் வட கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

எட்டப்பட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை 1961 இல் பனிப் போர் கூட்டணிகளான சோவியட் ஒன்றியம் மற்றும் வட கொரியா இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை புதுப்பிப்பதாக பார்க்கப்படுகிறது. 1990இல் சோவியட் ஒன்றியம், தென் கொரியாவுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை அடுத்து முந்தைய உடன்படிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விரிவான மூலோபாய கூட்டணி ஒன்றாக விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை (19) இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டிருப்பதோடு வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடன் போர் பதற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

கிழக்காசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் புட்டின் வட கொரியாவில் இருந்து வியாழக்கிழமை (20) வியட்நாமை சென்றடைத்தார்.

CATEGORIES
Share This