தமிழ் சினிமா வசூல் நாயகன்.. இளைஞர்களின் தளபதி:இன்று 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய் !
நடிகர் விஜய் இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு பிறந்தநாள் விழாக்களையும் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.
எப்போதும் புன்னகை, அமைதி என்று திரைப்பட விழாக்களில் வலம் வரும் விஜய் அதற்கு எதிர்மாறாக சினிமாவில் துள்ளல் நடனம், நக்கல், நய்யாண்டி, கோபம், சண்டை, காதல், பாசம் என எல்லாவற்றிலும் மிரட்டுவார். அதுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய்க்கு வலுவான அடித்தளத்தை அமைத்து தந்தது.
பொதுவாக கோலிவுட்டில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், என்ற வரிசையில் அஜித்துடன் விஜய்யை பொறுத்தியது சினிமா உலகம். அன்று தொடங்கி தற்போது வரை தன்னை உச்சபட்ச நட்சத்திரம் என்று அடையாளப்படுத்த தொடர்ச்சியாக உழைத்து வரும் விஜய்யின் பிறந்த நாள் இன்று.
விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது.
இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.
90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .
இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
பெப்ரவரி மாதம் இரண்டாம் தேதி என்று நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகு நான் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என விஜய் கூறி இருப்பது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.