பொது வேட்பாளரை தமிழரசுக்கட்சி எதிர்த்தால் பொதுத் தேர்தலில் மக்களால் ஓரங்கட்டப்படும்

பொது வேட்பாளரை தமிழரசுக்கட்சி எதிர்த்தால் பொதுத் தேர்தலில் மக்களால் ஓரங்கட்டப்படும்

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக 83, தமிழ் அமைப்புகள் குறிப்பாக யாழ்பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள் வெளிப்படையாக பிரசாரம் செய்யும் நிலையில் அவர்களுக்கு மாறாக அல்லது பொதுவேட்பாளரை தோற்கடிக்கும் விதமாக தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டால் அது நிச்சயமாக பொதுத் தேர்தலில் தமிழ்சுக் கட்சி தமிழ் மக்களிடமிருந்து ஓரம் கட்டப்படும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உபதலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பா.அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எந்த ஜனாதிபதி தேர்தலிலும் இல்லாத வகையில் இம்முறை வடகிழக்கில் உள்ள 83, சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி வடகிழக்கு தமிழ்த்தேசிய பலத்தை காட்ட வேண்டும் என்ற கொள்கைரீதியிலான முன் எடுப்பை ஏற்படுத்தி அதனை செயல் வடிவம் கொடுத்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அதற்காக வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவைகளையும் கோரியுள்ளனர்.

இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடகிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மத்தியில் மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளதை அவதானிக்கலாம், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிதல், தேர்தலை பகிஷ்கரித்தல், பெரும்பான்மை வேட்பாளர் ஒருவரை ஆதரித்தல். இந்த மூன்று நிலைப்பாடுகளில் தமிழ்த்தேசிய அரசியலை மட்டும் முன்னெடுக்கும் கட்சிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வழமைபோன்று ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏனைய கட்சிகளான தமிழீழவிடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்மக்கள் விடுதலைக்கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசியகட்சி, என்பன பொதுவேட்பாளருக்கு முழுமையான ஆதரவை தெரிவித்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன .

ஆனால் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உத்தியோகபூர்வமாக எந்த முடிவுகளையும் இதுவரை எடுக்கவில்லை. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எடுக்கும் எந்த முடிவுகளும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்படாதவகையில் அமையவேண்டும்.

ஜனாதிபதிதேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக 83, தமிழ் அமைப்புகள் குறிப்பாக யாழ்பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள் வெளிப்படையாக பிரசாரம் செய்யும் நிலையில் அவர்களுக்கு மாறாக அல்லது பொதுவேட்பாளரை தோற்கடிக்கும் விதமாக தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டால் அது நிச்சயமாக பொதுத்தேர்தலில் தமிழ்சுக்கட்சி தமிழ் மக்களில் இருந்து ஓரம் கட்டப்படும் என்பது தவிர்க்கமுடியாதது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு உடனே யார் ஜனாதிபதியானாலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் இடம்பெறும் இதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.
தமிழ்த்தேசிய கொள்கையுடன் தொடர்ச்சியாக மக்களிடம் வாக்கு கேட்கும் தமிழரசுக்கட்சி பொது அமைப்புகளை பகைத்து பொதுத்தேர்தலில் வாக்குகளை பெற முடியாது.

“ஊர் ஓடினால் ஒத்தோடவேண்டும் தனித்து ஓடமுடியாது” என்ற பழமொழிக்கு அமைவாக ஏனைய தமிழ்தேசியகட்சிகள், 83, பொது அமைப்புகள் எடுக்கும் தீர்மானத்தை நிராகரித்து பெரும்பான்மை வேட்பாளர் ஒருவரை தனியே தமிழரசுக்கட்சி ஆதரிக்கவேண்டும் என்ற எந்த காரணமும் இல்லை இது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.

CATEGORIES
Share This