இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு இல்லை என்கிறார் அமைச்சர் அலி சப்ரி

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு இல்லை என்கிறார் அமைச்சர் அலி சப்ரி

கடந்த மாதம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களை தாங்கள் கைது செய்ததாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை கூறியிருந்தது.

நான்கு பேரும் மே 19 அன்று கொழும்பில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மே 31 அன்று, இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பில் கைது செய்யப்பட்ட புஷ்பராஜா ஒஸ்மான் (46) என்ற ஒருவரை கைது செய்திருந்தது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரையும் கையாள்பவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் எவருக்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இல்லை என அமைச்சர் சப்ரி நேற்று (14) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் என்ற கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.

குறித்து நான்கு பேரும் (இலங்கையர்கள்) போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது” என்று அமைச்சர் அலி சப்ரி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஒஸ்மான் கைது செய்யப்பட்டதன் பின்னர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக்ப் பேச்சாளர், அவர்கள் நால்வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புள்ளவர்கள் என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம், குஜராத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களை விசாரிப்பதற்காக இலங்கை அதிகாரிகள் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்களில் முகமது நுஸ்ரத், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் மின் சாதனங்களை இறக்குமதி செய்யும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This