ஜனாதிபதித் தேர்தலில் போட்டி: ஜூலை 21இல் ரணில் வெளியிட போகும் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டி: ஜூலை 21இல் ரணில் வெளியிட போகும் அறிவிப்பு

இலங்கைத் தீவில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராf 2022ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் வெடித்தன.

மக்கள் எதிர்ப்பால் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சர்களும் தமது பதவிகளை துறந்தனர்.

கோட்டாபய ராஜபக்சவும் தமது பதவியை இராஜினாமா செய்ததால் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவானார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நெருங்கியுள்ளன. எதிர்வரும் ஜுலை 21ஆம் திகதியுடன் இரண்டு வருடங்களை எட்டவுள்ளதால் அன்றைய தினம் அவர் முக்கிய அறிவிப்பை நாட்டு மக்களுக்கு வெளியிட உள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான பகிரங்க அறிவிப்பை எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடுவார்.

“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 2 வருடங்கள் நிறைவு பெறும் நாளில் (ஜூலை 21) தேர்தலில் போட்டியிடும் பகிரங்க அறிவிப்பை அவர் வெளியிடுவார். இது தொடர்பில் கட்சிக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கட்சி கூடி உரிய வகையில் – உரிய முடிவை எடுக்கும்.” – என்றும் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
Share This