ராஜபக்ச குடும்பம் இல்லாத புதிய அரசியல் கூட்டணி?: முக்கிய அரசியல் பிரமுகர்களின் இரகசிய கலந்துரையாடல்
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் ‘ராஜபக்ச குடும்ப அரசியல்’ இல்லாத ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் அரசியல் மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பத்தினர் இல்லாத கூட்டணியை உருவாக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைய உள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக இங்கு மூன்று அரசியல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பு ஒரு வாரத்திற்குள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
அதன்பின், அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.